தக்காளி

லைக்கோ பேர்சிகன் ஸ்கியுலேன்டம்

Lycopersicon esculentum

குடும்பம் - சொலனேசி

காலநிலைத் தேவை

இலங்கையின் மலைநாட்டைத் தவிர்ந்த ஏனைய அனைத்து விவசாயக் காலநிலை வலயங்களிலும் தக்காளியைச் செய்கை பண்ணலாம். இலாபம் தரக்கூடிய, ஏற்றுமதி வாய்ப்புகள் உள்ள பயிராகும். விற்றமின் ஏ.சீ. கனிப்பொருட்கள் கொண்ட பயிராகும். இலங்கையில் பதுளை, நுவரெலியா, கண்டி, மாத்தளை ஆகிய பிரதேசங்களில் தக்காளி அதிகளவில் பயிரிடப்படுகின்றது.

சிபாரிசு செய்யப்பட்ட வர்க்கங்கள்

கே.டப்லியு. ஆர்.

செடி வகையைச் சேர்ந்தது. இவ்வர்க்கம் வாடல் நோய்க்கு எதிர்ப்புத்தன்மை கொண்டது. பழமொன்றின் சராசரி நிறை 50 கி.கி ஆகும். தாழ் மத்திய உயர் பிரதேசங்களுக்கு சிபாரிசு செய்யப்பட்டது. விளைவு 25 தொ/ஹெ

ரோமா

செடி தக்காளி வர்க்கமாகும். பழமொன்றின் நிறை சராசரி 60 கிராம் வரை இருக்கும். தடிப்பான சுற்றுக் கனியத்தைக் கொண்டது உலர் வலயத்திற்கு மிக உகந்தது.

மார்குளோப்

நுனிவளர் வர்க்கம் (கொடி வகை) மலைநாட்டு இடை வலயத்திற்கு மிக உகந்தது. பழமொன்றின் சராசரி நிறை 100 கிராம் கடினமான தோலைக் கொண்டது.

ரீ 146

செடி வகை ( நுனி வளராதவை ). பழமொன்றின் நிரை 90 கிராம் ஆகும். கடினமான தோல் காணப்படும். பக்றீரியா வாடல் நோய் நெமற்றோட்டு, வைரசு இலைச்சுருளல் நோய் என்பனவற்றிற்கு எதிர்ப்புத்தன்மை கொண்டது.

ரீ - 89 / பியான்ஸ்

நுனி வளர் வர்க்கம் (கொடிவகை). ஒரளவான தடிப்பான தோலைக்கொண்ட பழங்கள். பழமொன்றின் சராசரி நிறை 90 -100 கிராம்களாகும். மலைநாட்டின் இடைவலயத்திற்கு உகந்தது.

வினார 2

இவ் - 1 கலப்பின வர்க்கமாகும். செடியாக வளரும் தன்மை கொண்டது .பழ மொன்றின் சராசரி நிறை 65 கிராம் வரை இருக்கும். தோல் கடினமானதாக இருக்கும்.

திலின

நுனி வளர் வர்க்கமாகும். அதிக விளைவை தரும். 45 நாட்களில் பூக்கள் உருவாகுவதோடு 2 - 2 ½ மாதங்களில் முதலாவது அறுவடையைப் பெற்றுக் கொள்ள முடியும். குறைந்தது 12 தடவைகளாவது அறுவடை செய்யலாம். பச்சையாக சம்பல் செய்வதற்கும், பல்வேறு பொருட்களைப் பதனிடவும் உகந்தது. இவ்வர்க்கத்தின் காய்கள் கடினமானதாகையால் கொண்டு செல்லும்போது ஏற்படும் சேதங்களை நன்கு தாங்கும். பழமொன்றின் சராசரி நிறை 85 - 95 கிராம்கள் வரையாகும். பழங்கள் செம்மஞ்சள் சிவப்பு நிறமானவை. ஏனைய பெரும்பாலான வர்க்கங்களை விட இதில் விதைகள் குறைவாகவே இருக்கும். விளைவு 40 தொ /ஹெ

ரவி

அதிக சூழல் வெப்பநிலை உள்ள பிரதேசத்திற்கு உகந்த விசேட வர்க்கமாகும். நுனிவளரா வர்க்கமாகும். பழங்கள் செம்மஞ்சள் - சிவப்பு நிறமானவை. அறுவடைக்குப் பின் ஏற்படும் இழப்புகள் குறைவு. காய் வெடிப்பதற்கும், வாடலிற்கும் ஒரளவு எதிர்ப்புத்தன்மை கொண்டது.விளைவு 50 தொ/ஹெ

தரிந்து

வாடலிற்கு சிறந்த எதிர்ப்புத் தன்மையைக் கொண்ட வட்ட வடிவான பழங்கள் உருவாகும். பதனிடுவதற்கு உகந்த தக்காளி வர்க்கமாகும். பழமொன்றின் சராசரி நிறை 43 கிராம்களாகும்.

ரஷ்மி

கலப்பின தக்காளி வர்க்கத்தைப் போன்று பெரியளவான காய்கள் உருவாகும். உயர் விளைச்சலைப் பெறக்கூடிய வர்க்கமாகும். செடியாக வளரும், நுனி வளரா வர்க்கமாகும். பழங்கள் இளமஞ்சள் சிவப்பு நிறமானவை ஆகும். 185 கிராம் நிறையுடையது. வாடல் நோய்க்கு ஒரளவு எதிர்ப்புத்தன்மை கொண்டது. சராசரி விளைச்சல் ஹெக்டயரொன்றிற்கு 25 - 28 தொன் வரையாகும்.

மஹேசி

கலப்பின வர்க்கம், அதிக விளைவைத் தரக்கூடியது. பக்றீரியா வாடலுக்கு எதிர்ப்பைக் கொண்டது. பழங்கள் சிவப்பு நிறமானவை. சராசரி காயின் நிறை 125 கிராம் விளைவு 55 தொ /ஹெ

கே. சி - 01 (K C 1)

செடி வகை. வரண்ட பிரதேசங்களில் காலபோகம் சிறுபோகத்தில் பயிரிட உகந்தது. வெப்பத்தை தாங்கக் கூடியது. பழங்கள் மத்திய பெரிய அளவிலானவை சராசரி காயின் நிறை 55 கிராம். விளைவு 40 தொன் / ஹெ வட பகுதி விவசாயிகளிடையே பிரபல்யமானது.

லங்கா செறி

பக்றிரியா வாடல் நோய்க்கு எதிர்ப்பைக்கொண்டது. சராசரி காயின் நிறை 4 கிராம் விளைவு 17 தொன் / ஹெ

டி 245 (T 245)

செடி வகை. மழை நாட்டு இடைவலயத்திற்கு சிபாரிசு செய்யப்பட்டது. பழங்கள் செம்மஞ்சள் - சிவப்பு நிறமானது. மத்திய அளவானது. சராசரி காயின் நிறை 100 கிராம் தடித்த தோலைக் கொண்டது.

பாதியா

கலப்பினம், பக்றீரியா வாடலுக்கும் இலைச் சுருளல் வைரசு நோய்க்கும் எதிர்ப்பைக் கொண்டது. பழங்கள் சிவப்பு நிறமானது. சராசரி காயின் நிறை 85 கிராம். விளைச்சல் 60 தொன் / ஹெ

ராஜித

80 கிராம் நிறையுள்ள இவ்வர்க்கத்தின் பழங்கள் செம்மஞ்சள் நிறமானவை ஆகும். செடியாக வளரும். நுனி வளரா வர்க்கமாகும். வாடல்நோய்க்கு ஒரளவு எதிர்ப்புத்தன்மை கொண்டது. காய்கள் குறைவாகவே வெடிக்கும். சராசரி விளைச்சல் ஹெக்டயரொன்றிற்கு 30 மெ.தொன் வரையாகும்.

லங்கா சவர்

தெரிவு செய்த வர்க்கம். பக்றீரியா வாடல் நோய்க்கு எதிர்ப்பைக் கொண்டது. பழங்கள் செம்மஞ்சள் - சிவப்பு நிறமானது.

காயின் சராசரி நிறை 122g. விளைச்சல் 29 தொன் / ஹெ

தேவையான விதை

ஹெக்டயரொன்றிற்கு 300 - 400 கிராம்

நாற்றுமேடை

ஹெக்டயருக்குத் தேவையான நாற்றுக்களைப் பெறுவதற்கு 3 மீற்றர் நீளமும், 1 மீற்றர் அகலமும் கொண்ட 20 பாத்திகள் போதுமானதாகும். பாத்தியைச் சுற்றி வர 45 ச.மீ அகலமான காண்களை அமைக்க வேண்டும். பாத்திகளின் உயரம் 18 - 20 ச.மீ ஆக இருத்தல் வேண்டும். மேல் மண், கூட்டெரு என்பனவற்றை சம அளவில் கலந்து, 5 ச.மீ உயரத்திற்கு இடவும்.

பாத்திகளைத் தொற்று நீக்கம் செய்தல்

இரசாயனங்கள்: கப்ரான், திராம் என்பனவற்றை விசிறல். மேடைகளை தொற்று நீக்கம் செய்ய அவற்றின் மீது வைக்கோல், உமி என்பனவற்றை இட்டு எரிக்கலாம் அல்லது சூரிய வெப்பத்தால் தொற்று நீக்கம் செய்யலாம்.

நாற்றுமேடையில் விதைகளை நடல்

மார்ச் நடுப்பகுதியில் அல்லது ஆகஸ்ட் நடுப்பகுதியில் நாற்றுமேடையில் நடலாம். விதைகளை நடமுன் அவற்றைத் தொற்று நீக்கம் செய்ய வேண்டும். இதற்கு கப்ரான் அல்லது திராம் போன்ற பங்கசு நாசினிகளைப் பயன்படுத்தலாம். 125 கிராம் விதைக்கு 2 கிராம் பங்கசுநாசினி போது மானதாகும்.

நாற்றுமேடையில் விதைகளை வரிசைகளுக்கிடையே 12 -15 சதம மீற்றர் இடை வெளியில் நடுகை செய்யலாம். விதைகளை 0.5 - 1 ச.மீ அழத்தில் நட்டு தூர்வையான மண் படையால் மூடவும். இதன்பின் இப் பாத்தியை சுத்தமான வைக்கோல் படையால் மூடவும். அதிக சூரிய வெப்பம், கடும் மழை என்பனவற்றிலிருந்து நாற்றுக்களைப் பாதுகாக்க பாத்தியின் மேல் கூடாரமொன்றை அமைக்கவும். 7 நாட்களின் பின் பத்திரக் கலவையாக இட்ட வைக்கோலை அகற்றவும். 8 - 10 நாட்களின் பின் நாற்றுக்களைக் கையால் பிடுங்கவும்.

நாற்றுமேடையிலிருந்து நாற்றுக்களை பிடுங்குவதற்கு சில நாட்களுக்கு முன்னர் அவற்றை வன்மைப்படுத்த வேண்டும். இதற்கு நீரைக் குறைவாக ஊற்றுவதோடு, நாற்றுக்கள் மீது சூரிய ஒளியையும் படச் செய்ய வேண்டும்.

தோட்டத்தை ஆயத்தம் செய்தல்

முந்திய போகத்தில் சொலனேசியக் குடும்பத்தைச் சேர்ந்த மிளகாய், கத்தரி, உருளைக்கிழங்குப் பயிர்கள் நடப்படாத தோட்டத்தைத் தெரிவு செய்யவும். மண்ணை ஆழமாக உழுது பண்படுத்தவும். மேலதிகமான நீர் வடிந்தோடக் கூடியவாறு பாத்திகளை அமைக்கவும்.

தோட்டத்தில் நடல்

நாற்றுக்களைப் பிடுங்க முன் மேடையை ஈரமாக்கவும். 14 - 21 நாள் வயதுடைய நாற்றுக்களை நடவும். மாலை வேளையில் நடவும். நடுகைக் குழிகளுக்கு சேதனப் பசளைகளை இடல்வேண்டும். (6 - 12 தொ/ஹெ) சமதரையில் அல்லது உயரமான பாத்திகளில் நாற்றுக்களை நடவும். அதிக சூரியவெப்பம் இருக்குமாயின் வேர்கள் வளரும் வரை நீர் வழங்கவும்

நடுகை இடைவெளி

80 x 50 ச.மீ

பயிர்ப்பரிபாலனம்

தாவரங்கள் சரிந்து விழுவதைத் தடுப்பதற்காக பூக்க முன்னர் ஆதாரமொன்றை வழங்கவும். இதற்கு தக்காளித் தாவரத்திற்கண்மையில் தடி ஒன்றை ஊன்றி அதில் தக்காளியை இறுக்கிக் கட்டவும்.

நீர்ப்பாசனம்

தாவரங்களுக்கு போதியளவான நீரை வழங்கவும். அளவிற்கதிகமாக நீர் ஊற்ற வேண்டாம். குறிப்பாக உலர் காலத்தின் பின்னர் அதிகளவில் நீர் ஊற்றும் போது காய்கள் வெடிக்கலாம்.

பசளை இடல்

ஆயத்தம் செய்யப்பட்ட குழிகளுக்கு நாற்று நடுவதற்கு 2 நாட்களுக்கு முன்னர் சேதனப் பசளைகளுடன், அடிக்கட்டுப் பசளைகளையும் இட்டு மண்ணுடன் நன்கு கலந்து விடவும். சேதனப் பசளையாக 10 தொன் கோழி எருவையும் இடவும்.

இரசாயனப் பசளை

யூறியா

கி.கி / ஹெ

முச்சுப்பர் பொசுபேற்று

கி.கி / ஹெ

மியுறியேற்றுப்

பொட்டாசு கி.கி / ஹெ

அடிக்கட்டுப் பசளை

65

325

65

நட்டு 3வது வாரம்

65

-

-

நட்டு 4வது வாரம்

65

-

65

பதுளை மாவட்டத்திற்கு அடிக்கட்டுப் பசளையாக 220 கி.கி முச்சுப்பர் பொசுபேற்றை இடவும்.

களைக்கட்டுப்பாடு

நாற்று நட்டு 3வது, 6வது வாரங்களில் மேற்கொள்ள வேண்டும்.

தக்காளியைப் பாதிக்கும் பீடைகள்

தக்காளி காய் துளைப்புழு

சிறிய குடம்பிகள் இளம் பருவத்தில் புதிதாக உருவாகும் இலை அரும்புகளைத் தாக்குகின்றன. பின்னர் படிப்படியாக பழங்களைத் துளைக்கும். பழங்களில் வட்ட வடிவமான துளைகளைக் காணலாம்.

கட்டுப்படுத்தல்

பின்வரும் இரசாயனங்களில் ஏதாவதொன்றை விசிறவும். குளோபுளுவசுரோன் (அட்டபறோன்) 10 மீ.லீ 50 கி.லீ / செறிவு. பசிலஸ் துரென்ஜியென்கிஸ் (பீ.ரி) 45 கிராம்.

மேற்குறிப்பிட்ட நாசினிகளை சிபாரிசு செய்யப்பட்ட அளவில் விசிறல் வேண்டும். பூக்கள், காய்கள், உருவாகும் சந்தர்ப்பத்தில் நாசினிகளை விசிறல் வேண்டும். அவசியம் எனக் கருதினால் இதனை 14 நாட்களுக்கொரு தடவை விசிறவும். ஆனால் பீ.ரி. யை விசிறுவதாயின் 10 நாட்களுக்கொரு தடவை விசிறல் வேண்டும். அறுவடை செய்வதற்கு 14 நாட்களுக்கு முன் நாசினிகளை விசிறுவதை நிறுத்த வேண்டும்.

வெண் ஈ

வெள்ளை நிறப்பூச்சிகளை இலையின் அடிப்பகுதியில் காணலாம். இலையிலிருந்து சாற்றை உறிஞ்சிக் குடிப்பதால் இலை பாதிக்கப்படும். இப்பூச்சி வெளிவிடும் வெள்ளக் கரைசலால் பங்கசுத் தாக்கம் அதிகரிக்கும். இது இலைச் சுருளல் வைரசைக் காவும். இதனை கட்டுப்படுத்துவதற்கு ஒட்டும் மஞ்சள் நிறப் பொறிகளைப் பயன்படுத்தலாம். அல்லது இமிடக்குளோப்பிரிட் 70% wp பூச்சி நாசினியைப் பயன்படுத்தலாம்.

அழுக்கணவன்

பயிர் வளர்ச்சி குறைவடையும். இலை விகாரமடையும். விளைச்சல் குறைவடையும். வைரசுக் காவியாகவும் செயற்படும்.
பூச்சி நாசினி ஒன்றை விசிறி கட்டுப்படுத்தலாம். இயற்கை எதிரிகளையும் பயன்படுத்த முடியும்.

இலை சுரங்க மறுப்பி

இழையங்களை உணவாக உட்கொள்வதால் இலைகளின் உணவு தயாரிக்கக் கூடிய ஆற்றல் குறைவடையும். கடுமையான தாக்கத்தினால் இலைகள் விரைவாக உதிர்ந்து விடும்.

ஒட்டும் மஞ்சள் நிற பொலித்தீன் பொறிகளை பயன்படுத்தல் இயற்கை எதிரியை பாதுகாத்தல் சைரோரமசீன் 75% WP - 03 கிராமை 10 லீற்றர் நீரில் கலந்து விசிறவும்.

தக்காளி மூட்டுப்பூச்சி

நிறையுடலிப் பூச்சி செடியின் தண்டு, இலை, பூ என்பனவற்றிலிருந்து சாற்றை உறிஞ்சிக் குடிப்பதால் பாதிக்கப்பட்ட இழையங்கள் இறக்கும். இச் செடியின் பூக்கள் காய்கள் உதிர்வதுடன் கிளையின் நுனி வாடிப் போகலாம். உகந்த பீடைநாசினியை விசிறி இதனைக் கட்டப்படுத்தவும்.

வெட்டுப் புழு

இளம் நாற்றுக்களின் தண்டை இவை வெட்டுவதை அவதானிக்கலாம்.

கட்டுப்படுத்தல்

தோட்டத்தில் மண்ணைப் புரட்டி, அவற்றின் மீது வெயில் படச் செய்ய வேண்டும். நடுகை செய்யும் போது ஹெக்டயருக்கு 22-35 கிலோ கிராம் கார்போபியுரான் 3% குறுணலை இடவும். அல்லது பின்வரும் இரசாயனங்களில் ஏதாவதொன்றை நடுகை செய்த பின் நாற்றுக்களைச் சுற்றி மண்ணிற்கு விசிறல் வேண்டும். மண் நன்கு நனையும் வண்ணம் இதனை விசிறல் வேண்டும். (ரைக்குளோபோன் 500 கி / லீ - 37 மி.லீ டிப்டெரெக்ஸ்) புரோபெனொபொஸ் 500 கி / லீ - 23 மி. லீ (செலிக்குரோன்), புரோத்தியோபொஸ் 500 கி / லீ - 30 மி.லீ (ரோகுதயோன்) குளோபுளூவசுரோன் 50 கி / லீ - 10 மி. லீ (அட்டபுரோன்) என்பனவே சிபாரிசு செய்யப்பட்ட நாசினிகளாகும்.

மேற்குறிப்பிட்ட நாசினிகளின் அளவை 10 லீற்றர் நீரில் கரைத்து விசிறவும்.

தக்காளியைப் பாதிக்கும் நோய்கள்

நாற்றுமேடையில் ஏற்படும் நோய்கள்

பலவகையான பங்கசுகளினால் நோய் ஏற்படும். இதனால் அடி அழுகல் அல்லது நாற்றழுறுகல் நோய் ஏறபடலாம். நோயால் பாதிக்கப்பட்ட தாவரத்தின் அடிப்பகுதி அழுகி சரிந்து விழும் அல்லது வாடி பின்னர் இறந்து விடலாம்.

கட்டுப்படுத்தல்

நாற்று மேடையில் நோய்க் காரணிகள் காணப்படுவதால், நாற்றுமேடையைத் தயாரிக்கும்போது பாத்திகளுக்கு வெப்பமூட்டி அவற்றைத் தொற்று நீக்கம் செய்ய வேண்டும். இல்லாவிடில் பின்வரும் நாசினிகளில் ஒன்றை நீரிற் கரைத்து மேடை நன்கு நனையும் வண்ணம் ஊற்ற வேண்டும்.

கப்ரான் 50% - 6 கி.

கப்ரான் 80% - 4 கி.

குளோரோதலோனின (டகோனில்) - 6 கி. திராம் - 7 கி.

தயோபென்ட் மீதைல் (ரொப்சின்) - 3 கி.

மேற்குறிப்பிட்ட நாசினிகளின் அளவை 5 லீற்றர் நீரிற் கரைத்து, 2 சதுர மீற்றர் பிரதேசத்திற்கு ஊற்றவும்.

பின்வரும் பங்கசு நாசினிகளை விதையுடன் கலந்து அதனைப் பரிகரித்து பின்னர் நடவும். கப்ரான் 50% 6 கிராம், கப்ரான் 80% 4 கி. திராம் 4 கி. இந்த அளவு 1 கி.கி விதைக்குப் போதுமானதாகும்.

தோட்டத்தில் ஏற்படும் நோய்கள்

பங்கசு வாடல்

பல பங்கசுகளினால் ஏற்படும். தாவரம் வாடும், தாவரத்தின் அடியும், வேரும் அழுகும். சில வேளைகளில் வேர் அல்லது அடிப்பகுதியில் வெண்ணிறமான பங்கசு இழைகளைக் காணலாம்

கட்டுப்படுத்தல்

வடிகாண்களை ஆழமாக அமைத்து, நீர் வடிந்தோட வசதிகளைச் செய்யவும். முன்னர் குறிப்பிட்ட நாசினிகளில் ஏதாவதொன்றை நோயால் பாதிக்கப்பட்ட தாவரத்தின் வேரும், அதனைச் சுற்றியுள்ள தாவரத்தின் வேர்களும் நன்கு நனையும் வண்ணம் பூவாளியால் ஊற்றவும்.

பக்றீரியா வாடல்

மண்ணில் காணப்படும் பக்றீரியாவால் ஏற்படும் நோயாகும்.

நோய் அறிகுறி

தாவரம் வாடும். தாவரத்தின் அடிப் பகுதியும், வேரும் அழுகுவதை வெளிப்புறம் அவதானிக்க முடியாது. மண்ணின் மேற் பரப்பிலிருந்து 1 அங்குல உயரத்தில் தாவரத்தை வெட்டி நீரில் அமிழ்த்தும் போது அதிலிருந்து வெண்ணிறமான திரவம் வெளியேறுவதைக் காணலாம். இதனால் இந்நோய் பக்றீரியாவினால் ஏற்படும் வாடல் என்பதை உறுதிப்படுத்தலாம். இதன் மூலம் பங்கசுவால் வாடுவதை, பக்றீரியா வாடலிலிருந்து வேறுபடுத்தி அறியலாம்.

கட்டுப்படுத்தல்

வடிகாண்களை ஆழமாக்கி, நீரை வடிந்தோடச் செய்யவும். எப்போதும், எதிர்த்து வளரும் வர்க்கங்களை செய்கை பண்ணவும். கே. டப்ளிவ். ஆர் மிகவும் எதிர்ப்புத்தன்மை உள்ளது. ரி - 146ம் ஓரளவு எதிர்த்து வளரும். மண்ணிற்கு போதியளவு சேதனப் பசளைகளை இடவும்.

தக்காளி வெளிறல் நோய் (பிற்கூற்று)

இலைகளிலும், தண்டிலும் கபில நிறமான அல்லது கறுப்பு நிறமான புள்ளிகள் உருவாகும். மழை அல்லது பனி போன்ற ஈரமான கால நிலை காணப்படும் போது இப்புள்ளிகள் விரைவில் பெரிதாகி இறுதியில் அழுகும். இப் புள்ளிகளுக்கு மேல் காணப்படும் தாவரப்பாகம் முறிந்து விழும், அல்லது காய்களில் ஏற்படும் போது அவை அழுகும்.

கட்டுப்படுத்தல்

மழைக் காலநிலை நிலவும் போது அவதானமாக இருக்கவும். நோய் விரைவாகப் பெருகும். இதனால் முழுத்தோட்டமுமே அழியலாம். எனவே நோய் அறிகுறிகளை அவதானித்தவுடன் பின்வரும் நாசினிகளில் ஏதாவது இரண்டைத் தெரிவு செய்து 2 வார இடைவெளியில் மாறி, மாறி விசிற வேண்டும். ஒரே நாசினியைத் தொடர்ந்து விசிற வேண்டாம்.

குளோரோதலோனில் (டகொனில்) 30 மி.லீ.மனெப் - 25 மி. லீ. புரோபினெப் (அன்ரகோல்) 20 மி.லீ புரோபமோகொப் (பிறேவிகர்) 35 மி.லீ. மெங்கோசெப் 20 - மி.லீ மேற்குறிப்பிட்ட அளவுள்ள நாசினியை 10 லீ. நீருடன் கலந்து பயிர்கள் நன்கு நனையும் வண்ணம் விசிறல் வேண்டும். சிபாரிசுசெய்யப்பட்ட அளவு பசளைகளை மாத்திரம் இடவும். அளவிற்கதிகமாக யூரியாவை இட வேண்டாம். நோயால் பாதிக்கப்பட்டாத தாவரத்தை தோட்டத்திலிருந்து பிடுங்கி எரித்துவிடவும்.

தூள் பூஞ்சணநோய்

இலைகளின் கீழ்ப்புறம் தூள்போன்ற பூஞ்சணம் (பங்கசு) ஆரம்பத்தில் ஏற்படும். இதனால் இலைகளின் மேற்புறத்தில் மஞ்சள் நிறமான புள்ளிகள் ஏற்படும்.

கட்டுப்படுத்தல்

நோய் அறிகுறிகளை அவதானித்த உடன் கந்தகத்தூளில் 50 கிராமை 10 லீற்றர் நீரில் கரைத்து விசிறவும். தேவைப்படுமாயின் ஒரு வாரத்தின் பின் மீண்டும் விசிறவும்.

அந்திரக்நோசு

காய்கள் அழுகும் அல்லது தண்டு மேற்புறம் தொடங்கி அழுகுதல், பூக்கள் உதிருதல் என்பன ஏற்படும் மழை காலத்தில் நோய்த் தாக்கம் அதிகமானதாய் இருக்கும். பின்வரும் நாசினிகளில் ஒன்றை விசிறவும். குளோரோதலோனில் (டகோனில்) - 20 கிராம் மங்கோசெப் - 20 கிராம் மெனெப் - 20 கிராம், காபன்டசிம் (பெவிஸ்ரின்) - 07 கிராம் இதனை 10 லீற்றர் நீரிற் கலந்து விசிறவும்.

முற் கூற்றுவெளிறல்

முதிர்ச்சியடைந்த இலைகளில் முதலில் ஒழுங்கற்ற வடிவிலான புள்ளிகள் உருவாகி பின்னர் மேலேயுள்ள இலைகளை நோக்கி பரவும் கறுப்பு நிறமான வட்ட வடிவான பல வளையங்கள் காணப்படும். அவை சிப்பி போன்றிருக்கும். தக்காளிப் பழம் கனிவதற்கு முன்னர் காயின் கீழ்ப் பகுதி ஒரங்களில் அமிழ்ந்த கபில நிறமான தழும்புகள் காணப்படும்.
சிபாரிசு செய்யப்பட்ட பசளையை இடவும். நோயுற்ற பகுதிகளை அகற்றி அழித்து விடவும். தக்காளி குடும்பப் பயிர்களுக்கு அருகில் தக்காளியை பயிரிட வேண்டாம். சிபாரிசு செய்யப்பட்ட பங்கசு நாசினியை விசிறவும்.

சாம்பற் புள்ளி நோய்

தாவர இலை, தண்டு, பூ, காய் ஆகிய அனைத்து அங்குரப் பகுதிகளும் பாதிக்கப்படும். இறந்த தாவரப் பகுதிகள் கபில நிறமாக மாறும். தண்டின் நுனிப்பகுதி வாடும். பூக்கள் உதிரும். மங்கொசெப் போன்ற பங்கசு நாசினியில் அமிழ்த்திய கத்தியால் கத்தரிக்கவும். அமில மண்ணிற்கு நடுகைக்கு முன்னர் டொலமைற் அல்லது சுண்ணாம்பை மண்ணிற்கு சேர்க்கவும்.

ரைசோபஸ் அழுகல்

அறுவடை செய்த பின்னரே இந்நோய் ஏற்படும். காயங்கள் ஏற்படாதவாறு அறுவடை செய்தல், அறுவடை செய்த பின்னர் குளிரான இடத்தில் வைத்தல்.

பழத்தின் அடிப்புறம் அழுகுதல்

பயிருக்குக் கிடைக்கும் நீரின் அளவு தேவையைவிட அதிகரிக்கும் போதோ அல்லது குறையும் போதோ ஏற்படும். பழத்தின் அடிப்புறம் அழுகும்.

கட்டுப்படுத்தல்

இதனைக் கட்டுப்படுத்த நீர் அதிகளவில் கிடைக்கும் காலத்தில் வடிகாண்களை அமைத்து மேலதிக நீரை வடிந்தோடச் செய்யவும். நீர்ப் பற்றாக்குறைவாக உள்ள போது நீர் ஊற்றவும். ஓரே அளவான நீர் கிடைப்பதை உறுதிசெய்ய வைக்கோல், இலை குழைகள் போன்றவற்றால் தாவரத்தைச் சுற்றி பத்திரக்கலவை இடவும்..

வைரசு நோய்கள்

தக்காளியை நான்கு வகையான வைரசு நோய்கள் பாதிக்கின்றன அவையாவன

கெக்கரி சித்திர வடிவ வைரசு (B,J,S)

புகையிலை சித்திர வடிவ வைரசு (W.J.S)

டோமாட்டோ ஸ்பொட் வில்ட் வைரசு (W.U.S.S)

கேர்லி ரொப் வைரசு (B.W)

தக்காளி மஞ்சள் நிற இலைச் சுருளல் வைரசு (W.K.Z.B.S)

கெக்கரி சித்திர வடிவ வைரசு

தாவரம் கட்டையாகும். இலைகள் மஞ்சள் நிறமானதாக மாறும். இலைகள் சிறியதாகும். காய்கள் சிறியதாகவே காணப்படும். விளைச்சல் குறையும். பிந்தியே முதிர்ச்சியடையும். இவ்வைரசு பொதுவாக அழுக்கணவன்கள், நோயால் பாதிக்கப்பட்ட தாவரத்தின் தாவரச் சாறு ஆரோக்கியமான தாவரத்தில் படல், களைகள் விதைகள் என்பனவற்றின் மூலம் பரவுகின்றது.

கட்டுப்படுத்தல்

களைகளை அழித்தல், கெக்கரி, சொலனேசியேக் குடும்பப் பயிர்களுடன் தக்காளியை நடுகை செய்யாமலிருத்தல், நோயால் பாதிக்கப்பட்ட தாவரத்தைப் பிடுங்கி அழித்தல், காவிகளான அழுக்கணவன்களைக் கட்டுப்படுத்த பூச்சிநாசினிகளை விசிறுதல் என்பனவற்றின் மூலம் இந் நோயைக் கட்டுப்படுத்தலாம்.

புகையிலை சித்திர வடிவ வைரசு

தாவரம் கட்டையாகும். இலை நீண்டு, ஒடுங்கிக் காணப்படும். இலையில் சித்திர வடிவமும், புள்ளிகளும் காணப்படும். எல்லாக் காய்களும் ஒரே நேரத்தில் கனியாது. நோயால் பாதிக்கப்பட்ட தாவரத்திலிருந்து விதைகள் மூலமே இவை பரவும். இதைத் தவிர மண், வேர், நோயால் பாதிக்கப்பட்ட தாவரப் பாகம் என்பனவற்றின் மூலம் இந்நோய் பரவும்.

கட்டுப்படுத்தல்

நோயால் பாதிக்கப்பட்ட தாவரங்களை எரித்தல், சுத்தமான விதைகளைப் பயன்படுத்தல், நடமுன் விதைகளைப் பரிகரணம் செய்தல், இதற்கு விதைகளை ரைசோடியம் டிகோபொஸ் பேட் கரைசலில் 15 நிமிடங்கள் வரை விதைகளை இட்டு, பின்னர், நீரிற்கழுவி உலர்த்தலாம்.

டொமாட்டோ ஸ்பொட்வில்ட் வைரசு

இலைகளில் செப்பு நிறம் ஏற்படும் இளம் இலைகளின் மேற்பரப்பில் இறுக்கமான கறைகள் ஏற்படும். நுனி இறக்கும் அல்லது தாவரத் தண்டில் கோடுகள் உண்டாகும். கிளைகள் வாடி, முறியும்.காய்களின் மேற்பரப்பில் வட்டமான புள்ளிகள் ஏற்படும் இந்நோய் பனிப்பூச்சிகள், விதைகள் சாறு என்பனவற்றின் மூலம் பரவும்.

கட்டுப்படுத்தல்

களைகளை அழித்தல். நோயால் பாதிக்கப்பட்ட தாவரங்களை அகற்றுதல், ஆரோக்கியமான விதைகளைப் பயன்படுத்தல், பனிப்பூச்சிகளைக் கட்டுப்படுத்த உகந்தபூச்சி நாசினியொன்றை விசிறுதல் என்பனவற்றின் மூலம் இந்நோய் பரவுவதைக் கட்டுப்படுத்தலாம்.

தக்காளி மஞ்சள் நிற இலைச் சுருள் வைரசு

தண்டில் அரும்புகள் நேராக இருப்பதோடு, அவை பின்னர் முறிந்து போகும், இலைகள் சிறியதாகும். இலைகள் மேற்புறமாகவோ அல்லது கீழ்ப்பக்கமாகவோ சுருளும். வளர்ச்சி குன்றும் இந்நோய் வெண் ஈ மூலமே பரவும். ஆனால் இந்நோய் விதையின் மூலமோ அல்லது தாவரச் சாற்றின் மூலமோ பரவமாட்டாது.

கட்டுப்படுத்தல்

இதனைத் தவிர்ப்பதற்கு வெண் ஈ யைக் கட்டுப்படுத்த உகந்ந பூச்சிநாசினி ஒன்றை விசிறல் வேண்டும். நோயால் பாதிக்கப்பட்ட தாவரத்தைப் பிடுங்கி அகற்ற வேண்டும். களைகளைக் கட்டுப்படுத்த வேண்டும்.

கர்லி டொப் வைரசு

இளம் பருவத்தில் நோயால் பாதிக்கப்படும் போது தாவரம் இறக்கும். தாவரம் கட்டையாகும். இலைக் காம்பு முறிந்து கீழே விழும். இலை மேற்புறமாகச் சுருளும். இலை கபில நிறமாகவும், காம்பு ஊதா நிறமாகவும் மாறும். காய்களில் கபில நிறமான புள்ளிகள் ஏற்படும். பச்சை இலைத் தத்திகளின் மூலமே இவை பரவுகின்றன. தாவரச் சாற்றின் மூலம் இவை பரவுவதில்லை.

கட்டுப்படுத்தல்

பச்சை இலைத் தத்திகளைக் கட்டுப்படுத்த சிபாரிசு செய்யப்பட்ட உகந்த நாசினியொன்றை விசிறல் வேண்டும். நோயால் பாதிக்கப்பட்ட தாவரங்களை அகற்றுதல், பீற் உடன் தக்காளியைக் கலப்புப் பயிராகச் செய்கை பண்ணாது தவிர்த்தல் என்பனவற்றின் மூலமே பரவுதைத் தவிர்க்கலாம்

வட்டப்புழுக்களின் தாக்கம்

வேர்களில் முடிச்சுக்கள் காணப்படும், தாவரம் வெளிறல் இலைகளின் நிறம் மாறும். வளர்ச்சி குன்றி குறளாதல் தாவரம் வாடல் இதனைக் கட்டுப்படுத்த நிலத்தைப் பண்படுத்தி பல தடவை மண்ணை நன்கு புரட்டவும் சுழற்சி முறைப் பயிர்ச்செய்கை கோழி உரத்தை பயன்படுத்தல்

உடற்றொழிலியல் குறைபாடு

காய் நுனி அழுகல்

பச்சை நிறமான காய் நுனியின் ஒரத்தில் சிறிய ஈரமான புள்ளிகள் உருவாகும். இப்புள்ளி உலரும் போது கடும் கபில நிறமாக மாறும். மண்ணில் போதியளவு கல்சியம் இல்லாமலிருப்பதும் இரவு நேர சாரீரப்பதன் குறைவடைதல் இதற்கு காரணமாகும்.

பயிருக்கு கல்சியத்தை வழங்கல், கல்சியத்தை உறிஞ்சத் தடையை ஏற்படுத்தாதவாறு சிபாரிசு செய்யப்பட்ட அளவு பசளையிடல் மண்ணின் ஈரப்பதனைப் பேணல் இதனைக் கட்டுப்படுத்த உதவும்.

காய் வெடித்தல்

காம்புள்ள இடத்தில் காயைச் சுற்றி அல்லது காயின் நீள் பக்கமாக வெடிப்பது இதன் அறிகுறி காய் கனியும் போது திடீரென மழை பெய்வதால் பயிரிற்குக் கிடைக்கும் நீரின் அளவு சடுதியாக அதிகரித்தல் அதிக சூழல் வெப்பநிலை கல்சியம் குறைபாடு என்பவற்றால் இது ஏற்படும்.
காய் வெடித்தலை எதிர்த்து வளரும் வர்க்கங்களைப் பயிரிடல் மண்ணின் ஈரப்பதனை பேணல். போதிய கல்சியத்தை வழங்கல் இதனைக் கட்டுப்படுத்த உதவும்.

வீங்கிய காய்கள் உருவாதல்

மகரந்தச் சேர்க்கை, விதைகள் உருவாவதற்கு தடையான சூழல் என்பன வீங்கிய காய்களை உருவாக்கும்.

அறுவடை செய்தல்

பழங்கள் பச்சை நிறத்திலிருந்து மஞ்சளாகும் போது அறு வடை செய்யவும். 10 - 12 தடவைகள் அறுவடை செய்யலாம்.

விளைச்சல்

நன்கு பராமரிக்கப்பட்ட தோட்டம் ஒன்றிலிருந்து 20 - 30 மெ.தொ விளைவைப் பெறலாம்

அறுவடைக்குப் பின்

அறுவடை செய்த பழங்களை அளவிற்கேற்ப வகைப்படுத்தி காற்றோட்டமுள்ள பெட்டியில் கொண்டு செல்லலாம்.