லீக்ஸ்
லீக்ஸ்
லியம் ம்பெலோபிரசம் போறம்
Allium porrum
குடும்பம் - லியேசி
லியேசி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பயிராகும். ஆனால் இதில் குமிழ்கள் உருவாகாது. இதற்கு சந்தையில் எப்போதும் கிராக்கி நிலவுகின்றது. வெங்காயத்தின் விலை அதிகமாகும் போது, அதற்குப் பதிலாக லீக்ஸ் பயன்படுத்தப் படுகின்றது.
காலநிலைத் தேவை
மலைநாடு லிக்சைப் பயிர்செய்ய மிக உகந்த பிரதேசமாகும். மலைநாட்டு ஈர வலயம், இடை வலயத்தைச் சேர்நத நுவரெலியா, பதுளை ஆகிய மாவட்டங்களில் நிலவும் குளிரான காலநிலையில் இப் பயிர் நன்கு வளரும்.
மண்
பெருமளவில் சேதனப் பசளைகளைக் கொண்ட, வளமான மண் உகந்நது, உகந்த பீ.எச். மட்டம் 5 - 6 ஆகும்.
சிபாரிசு செய்யப்பட்ட வர்க்கங்கள்
லார்ஜ் லோங் சமர்
இதன் இலைகள் நீண்டு, ஒடுங்கிக் காணப்படுவதோடு, நிமிர்ந்து காணப்படும். கடும் நீலப்பச்சை நிறமுடையவையாகும். தண்டு மெல்லிய பச்சை நிற வெண்மையானது.
தேவையான விதை
ஹெக்டயரொன்றிற்க்கு 3750 கி.
நாற்றுமேடை
ஹெக்டயருக்குத் தேவையான நாற்றுக்களைப் பெற்றுக்கொள்ள 3 மீற்றர் நீளமும், ஒரு மீற்றர் அகலமும், 20 ச.மீ உயரமும் கொண்ட 200 - 225 பாத்திகள் போதுமான வையாகும்.
மண்ணைக் கொத்தி நுண் தூர்வையாக்கி மேடைகளைத் தயாரிக்கவும். இப்பாத்திகளுக்கு குறிப்பிடத்தக்களவு உக்கிய சாணம், சிறதளவு முச் சுப்பர் பொசுபேற்று என்பனவற்றை இட்டு கலந்து விடவும். மண்ணின் பீ.எச் பெறுமானம் 5 ஐ விடக் குறையும் போது சிபாரிசு செய்யப்பட்ட அளவில் சுண்ணாம்பிடல் வேணடும். உதாரணமாக பீ.எச். பெறுமானம் 4.9 ஆகக் காணப்படுமாயின் 1200 கி.கி சுண்ணாம்பை ஹெக்டயருக்கு இடவும். விதைப்பதற்கு 03 கிழமைகளுக்கி முன்னர் சுண்ணாம்பிடல் வேண்டும்.
நாற்றுமேடை அமைக்கும் காலம்
மலைநாட்டில் வருடத்தின் எப்பகுதியிலும் மேடைகளை அமைக்கலாம். ஆனால் ஏனைய பிரதேசங்களில் ஒக்டோபர் - நவம்பரில் அமைக்க வேண்டும்.
வரிசைகளுக்கிடையே 15 சதம் மீற்றர் இடைவேளியில் விதைக்க வேண்டும். விதைகளை மெல்லிய மண்படையால் மூடி விடல் வேண்டும். தேவையான போது நீரூற்றவும்.
நாற்று மேடையில் உள்ள நாற்றுக்களில் காணப்படும். பனித்துளி கழுவிச் செல்லக்கூடியவாறு காலையில் நீரூற்ற வேண்டும். நாற்று மேடையில் களைகள், நோய்கள், பீடைகளைக் கட்டுப்படுத்தவது அவசியமாகும். நாற்றுக்கள் சிறியதாக இருக்கும்போது வெட்டுப்புழுக்களின் தாக்கத்தைக் குறைப்பதற்காக ஒவ்வொரு பாத்திக்கும் சிறிதளவு கார்போபியுரானை இடல் வேண்டும்.
லீக்ஸ் நாற்றுகள் மிகச் சிறியதாக இருக்கும்போது அவற்றை மிகக் கவனமாகப் பராமரிக்க வேண்டும். பென்சில் தடிப்புடைய நாற்றுக்கள் நடுவதற்குப் பொருத்தமானவை. பொதுவாக 2 1/2 -3 மாதங்களில் பின் நடுவதற்கான நாற்றுக்களை நீங்கள் பெற்றுக்கொள்ள முடியும்.
தோட்டத்தை ஆயத்தம் செய்தல்
30 - 40 ச.மீ ஆழத்திற்கு மண்ணைப் புரட்டி தூர்வையாக்கவும் ஹெக்டயருக்கு 10 - 20 தொன் சேதனப் பசளையை மண்ணிற்கு இடல் வேண்டும். மண்ணின் பீ. எச். பெறுமானம் 5 ஐ விடக் குறையுமாயின் சிபாரிசு செய்யப்பட்ட அளவு சுண்ணாம்பிடத் தவறாதீர்கள். பாத்திகள் 1.2 மீற்றர் அகலமாயும். 3 மீற்றர் நீளமானதாகவும் இருத்தல் வேண்டும். ஹெக்டயருக்கு இவ்வாறான 2750 பாத்திகள் போதுமானதாகும்.
நடலும், நடுகை இடைவேளியும்
நாற்றுமேடையில் சரியான அளவு வளர்ச்சியடைந்த, ஆரோக்கியமான நாற்றுக்களைக் கவனமாகப் பிடுங்கி வேண்டும். இதன் இலை நுனியையும், வேர் நுனியையும் சிறுதளவு வெட்டிய பின் நடுகை செய்யவும்.
வரிசைகளுக்கிடையே 15 சதம் மீற்றர் இடைவெளியிலும், வரிசையில் இரு தாவரங்களுக்கிடையே 10 சதம் மீற்றர் இடைவெளியிலும் நாற்றுக்களை நடவும்.
பசளை இடல்
|
யுறியா கி.கி / ஹெ |
முச்சுப்பர் பொசுபேற்று கி.கி / ஹெ |
மியுறியேற்றுப் பொட்டாசு கி.கி / ஹெ |
அடிக்கட்டுப் பசளை |
85 |
275 |
50 |
4வது வாராம் |
85 |
- |
- |
8வது வாராம் |
85 |
- |
50 |
12வது வாராம் |
85 |
- |
- |
16வது வாராம் |
85 |
- |
50
|
களைக்கட்டுப்பாடு
2 வாரங்களில் பாத்திகளில் வளரந்துள்ள களையை முதலாவது தடவை பிடுங்கவும். இதன் பின் ஒவ்வொரு தடவையும் பசளை இடமுன் பிடுங்கவும்.
பசளை இட்டபின் மண் அணைக்கவும். இதனால், தண்டு வெண்ணிறமாகவும், நேராகவும் வளரும்.
நீர்ப்பாசனம்
நட்டு முதல் 4 நாட்களுக்கு தினந்தோறும் நீர் ஊற்றவும். இதன்பின் தேவையைப் பொறுத்து 2 - 4 நாட்களுக்கு கொருதடவை நீரூற்றவும்.
கலப்புப் பயிர்ச்செய்கை
லீக்ஸ் பயிரை நட்டு அறுவடை செய்ய 4 1/2 - 6 மாதங்கள் வரை செல்லும் எனவே நிலத்தை மிகவும் வினைத்திறனாகப் பயன்படுத்த நுவரெலியாப் பகுதியில் பெரும்பாலான விவசாயிகள் லீக்ஸ் நடுகை செய்துள்ள பாத்தியில் பீற்றுட், கரட், சலாது போன்ற பயிர்களைப் பயிரிடுவர் இதனால் மேலதிகமான வருமானத்தையும் பெறக் கூடியதாக இருக்கும்.
பீடைக்கட்டுப்பாட்டு
அண்மையில் நுவரெலியா பிரதேசத்தில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திய ‘’லிறுயோமைசா ஹீடோபிரென்சிஸ்’’ என்னும் இலைச் சுரங்கமறுப்பி லீக்ஸ் பயிரிற்கு மிக ஆபத்தானதாக மாறியுள்ளது. ஒட்டக் கூடிய பொருட்களைத் தடவிய மஞ்சல் நிறமான பொலித்தீன் துண்டுகளைத் தொங்கவிடல், நோயுற்ற தாவரப்பாகங்களை அழித்தல், சுழற்சி முறைப் பயிர்ச்செய்கை, சிபாரிசு செய்யப்பட்ட நாசினிகளை விசிறல் என்பனவற்றின் மூலம் இதனைக் கட்டுப்படுத்தலாம்.
நோய்க் கட்டுப்பாடு
ஊதா புள்ளி நோய்
முதிர்ச்சியடைந்த இலைகளில் கபில - ஊதா நிறமான புள்ளிகள் உருவாகும்.
நடுவதற்கு முன் விதைகளைப் பரிகரித்தல், பயிர் சுழற்சி, சிபாரிசு செய்யப்பட்ட நாசினிகளை விசிறல் என்பனவற்றின் மூலம் இந்நோயைக் கட்டுப்படுத்தலாம்.
அறுவடை செய்தல்
நட்டு 4 1/2 மாதங்களின் பின்னர் அறுவடை செய்யலாம். தண்டின் தடிப்பிற்கேற்ப அவற்றை வகைப்படுத்தி, காற்றோட்டம் கிடைக்கத்தக்கவாறு, கயிற்றுக் சாக்கு அல்லது பாய் போன்றவற்றால் மூடிக் கட்டுகளாகக் கட்டி சந்தைகளுக்கு அனுப்பவும்.
விளைச்சல்
ஹெக்டயருக்கு 19 - 24 மெ.தொன்